வானிலை தொடர்ந்து சீர்குலைகிறது – இன்றைய வானிலை இதோ!

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதன்காரணமாக அடுத்து 75mm-100mm மழை பெய்யக்கூடும் எனவும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50kmph-60kmph வரை அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் சூறாவளி நிலைமை மேலும் தீவிரமடையலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டி ஏ-09 வீதியின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் வீதியின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் கடும் மழை காரணமாக தடைப்பட்டிருந்த அநுராதபுரம் – பாதெனிய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக வாரியபொல – மினுவங்கடே தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் வீதி தடைப்பட்டுள்ளது.

மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 1,962 குடும்பங்களைச் சேர்ந்த 6,198 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளைய தினம் இலங்கையை விட்டு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமையை கருத்திற் கொண்டு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெதுரு ஓயாவின் நீர் மட்டம் உயர்வினால் வாரியபொல, நிகவெரட்டிய, பிங்கிரிய, ஆராச்சிக்கட்டுவ, கொபேகனே , சிலாபம் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொறியியலாளர் சகுரா டில்தரா தெரிவித்தார்.

தவிர, மகாவலி மற்றும் களனி ஆறுகள் இன்னும் ஆபத்தானவையாகவே உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 73 பிரதான குளங்களில் 37 நீர் நிலைகளிலிருந்து நீர் தற்போது வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த குளங்களின் நீர் கொள்ளளவு 77 சதவீதத்தை தாண்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மழையுடன், பல நெடுஞ்சாலைகள் மற்றும் பக்க சாலைகள் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் ஒலுவில் – காளி ஓடை பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாலம் மூழ்கியுள்ளதாக அப்பகுதியின் ஹிரு செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் மல்வான மற்றும் பைகம பிரதேசங்களில் உள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் கொழும்பு – மட்டக்களப்பு வீதி கல்லெல்ல பகுதியிலிருந்து இன்னும் மூடப்பட்டுள்ளது.

மேலும் சோமாவதி புனித பூமியும் நீரில் மூழ்கியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 98,635 குடும்பங்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், சம்பவத்தில் மேலும் இரு மாணவர்கள் மற்றும் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரத்தையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிஓடை பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பேர் கொண்ட குடும்பத்தை மீட்கும் பணியில் நேற்று கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, ​​வெள்ள அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான 135 கூடுதல் நிவாரண குழுக்களை கடற்படை தயார் செய்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த 4800 ஏக்கருக்கும் அதிகமான காணி அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் நம்பாமல் அனர்த்த நிலைமை ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று தகவல்களை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.