மட்டு. மாவட்ட தமிழரசு எம்.பிக்கள் கிழக்கு ஆளுநருடன் நேரில் சந்திப்பு – அனர்த்த முகாமை தொடர்பில் ஆராய்வு.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்து உரையாடினார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து பேசப்பட்டது.
மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பினாலும் கூட பல விடயங்களை கருத்தில்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அநேகமான பாலங்கள், பாதைகள் போன்றன சேதமடைந்துள்ளன. இதனைப் புனரமைப்பு செய்வதற்குரிய ஆயத்தங்கள் மிக விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்காகத் தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட மட்டத்தில் அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் இணைத்து கூட்டமொன்றை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.