தமிழர்கள் அதிகளவு வாழும் வடக்கு – கிழக்கில் இனி எந்த நினைவேந்தலுக்கும் அநுர அரசு அனுமதிக்கக்கூடாது! – இப்படிக் கொக்கரிக்கின்றார் விமல்.
“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும்.
தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை.
எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா?
வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.