சீரற்ற காலநிலை காரணமாக 338,446 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதுடன் 137,880 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலேயே அதிகளவான சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும், யாழ்ப்பாணம், அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்களை இதுவரையில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
சில பிரதேசங்களில் உள்ள விவசாய சேவை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அங்கு சென்று கடமைகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்க்ஷ தெரிவிக்கின்றார்.
இதுவரை 101,035 ஏக்கர் நெற்பயிர்களில் 46,674 விவசாயிகளின் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்னும் 237,481 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 91,206 விவசாயிகள் பயிர் சேதம் அடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கரும், வவுனியாவில் 23,247 ஏக்கரும், மன்னாரில் 20,865 ஏக்கரும், திருகோணமலையில் 10,672 ஏக்கரும் சீரற்ற காலநிலை காரணமாக அழிவடைந்துள்ளன.
மலையகப் பகுதிகளில் மரக்கறி பயிர்களும் அழிவடைந்துள்ளதுடன் நுவரெலியா பிரதேசத்தில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட பல மரக்கறி பயிர்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய வெள்ள நிலைமை தணிந்தவுடன் பயிர் சேத மதிப்பீடுகளை ஆரம்பிக்க விவசாய சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.