20 இற்கு எதிராக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திப்பீர்! சுமந்திரன்
20 இற்கு எதிராக மக்களின்
கடும் எதிர்ப்பைச் சந்திப்பீர்!
அரசுக்கு சுமந்திரன் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை
“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுக்கச் செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்துக்கு சுமந்திரன் எம்.பி. இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் பல்வேறு பிரசாரங்களைச் செய்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் செயலமர்வு எம்மால் நடத்தப்பட்டது.அம்பாறை காரைதீவு பகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து இந்தத் திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
இந்தத் திருத்தத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுக்கச் செய்வதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஏனெனில், இந்தத் திருத்தமானது ஜனநாயக விரோதச் செயலாக உள்ளது. இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதித்தால் இந்த நாட்டில் ஜனாநாயகக் கட்டமைப்பைப் பேணாது மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும்.
அதுபோன்று நிலம் சம்பந்தமான பல திட்டங்களையும் அரசு தற்போது அமுல்படுத்தி வருகின்றது. எனவேதான் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமல் ஜனநாயகப் பண்பைப் பேண வேண்டியது எமது கடமையாக உள்ளது. எனவே, பொறுத்திருந்து பாருங்கள்” – என்றார்.
இந்த விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.