சிறைச்சாலைத் திணைக்களத்தில் உள்ள 1585 பேர் ஒரே நேரத்தில் இடமாற்றம்

சிறைச்சாலைத் திணைக்களத்தில் இடமாற்றம் ! இது போன்ற வேலை வரலாற்றில் நடந்ததில்லை… இது மிகவும் அநியாயம்… என சிறை அதிகாரிகள் அதிர்ச்சி.

சிலர் இடமாற்றம் செய்யப்படாமல் 20 வருடங்களாக ஒரே இடத்தில்… நாட்டில் எங்கும் கடமையாற்ற வேண்டிய அரச அதிகாரிகள்… தணிக்கை புதிவேடு அறிக்கைகளைப் பார்த்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்… என்கிறார் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல்வேறு தரங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றங்கள் நியாயமற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் இடமாற்ற சபையினால் 1585 வெவ்வேறு தரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வருடாந்த இடமாற்றத்தின் போது அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான இரண்டு இடங்களை பரிந்துரைக்க வேண்டும் என இடமாற்ற சபை தெரிவித்ததாகவும், ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான அதிகாரிகள் தாங்கள் கேட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சில அதிகாரிகள் காரணமின்றி 100 மற்றும் 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமையினால் தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அநியாயமாக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்து தமக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதால் சிறைச்சாலைத் திணைக்களத்தில் 79 பணியிடங்கள் தொடர்பான 1,717 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், சிறைச்சாலைகளை நடத்துவதில் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில சிறைச்சாலைகளில் 50 அல்லது 80 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இடமாற்ற சபை அதிகாரிகளின் தேவையின் அடிப்படையில் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சரின் கவனத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்கவிடம் நாம் வினவியபோது அவர் கூறியதாவது:

“இந்த அதிகாரிகள் , வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இடமாற்றங்களை வழங்கும்போது கணக்காய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டிய உண்மைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.