7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.
தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறை ஏழு நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றது.
ஹைதராபாத்தில் இருந்து 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) காலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டு படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அந்தச் சண்டையில் நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக தெலுங்கானா மாநில காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஷபரீஷ் கூறுகையில், “வனப்பகுதியில் காவல்துறைக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை வலைவீசித் தேடி வருகிறோம்,” என்றார்.