கேரளாவில் அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 மருத்துவ மாணவர்கள் பலி!
அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 மருத்துவ மாணவர்கள் பலியாகிய சம்பவம் கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சங்கனாசேரி முக்கு பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
வந்தனம் பகுதியிலுள்ளதொரு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தேவாநந்தன், ஸ்ரீதீப் வல்சன், ஆயுஷ் ஷாஜி, முஹம்மது அப்துல் ஜாஃபர், முஹம்மது இப்ராஹிம் ஆகிய 5 மாணவர்கள் உள்பட மொத்தம் 11 பேர் நேற்றிரவு ஒரு காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் இரவு 9 மணியளவில் காலர்கோடு பகுதியிலுள்ள சங்கனாசேரி முக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தின் மீது படு வேகத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 இளைஞர்களும் உடல் நசுங்கி பலியாகினர். உயிரிழந்த இளைஞர்கள் அனைவரும் 20 வயதுக்குள்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கியதுடன் பலத்த சேதமுமடைந்துள்ளது. பேருந்தில் இருந்த பயணிகளில் 15 பேருக்கு காயமுண்டானது. அவர்கள் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
அதிகபட்சமாக 8 பேர் வரை மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய காரில் 11 பேர் சென்றிருப்பதால், கார் நிலை தடுமாறி விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.