ஃபெங்கல் புயலால் வட மாவட்டங்களில் ஏராளமானோர் பாதிப்பு

ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருந்து 4,906 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் உள்ள பொது மக்களுக்காக 16,600 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் அரசு கூறியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக டிசம்பர் 3 ஆம் தேதியன்று 1.58 லட்சம் உணவுப் பொட்டலங்களும் 4,300 லிட்டர் பால் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

வெளி மாவட்டங்களில் இருந்து 11,000 அரிசி பாக்கெட்டுகள் (65,000 கிலோ), 10,500 மளிகைப் பொருள் பாக்கெட்டுகள், 2,900 ஆடைகள், போர்வைகள், 14,500 பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவை வரப்பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் கடந்த 3 ஆம் தேதியன்று 116 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் மூலம் 8,400 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

“மூன்று நகராட்சிகளில் மழை சூழ்ந்த 42 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 12 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 4 ஆம் தேதி ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று தமிழக அரசு மேலும் கூறியுள்ளது.

மழை நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட 2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

புயல், கன மழையால் 860 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றுள் 728 வீடுகள் பகுதியாகவும் 122 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

இந்த முறையும் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு வசிப்பவர்களை மீட்புப்படையினர் முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்றினர். இதையடுத்து சுமார் 20,000 பேர் 35 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர் என்றும் அவர்களுக்கு 68,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. டிசம்பர் 1 ஆம் தேதி 9.7 சென்டி மீட்டர், டிசம்பர் 2 ஆம் தேதி 17 சென்டி மீட்டர் மழை பெய்ததாக தெரிவித்துள்ள தமிழக அரசு, 461 கூரை வீடுகள் சேதமடைந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 612 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.