ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch) கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை (04) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.
இன மற்றும் மத பதட்டங்களைக் குறைத்து தேசிய ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகளை பிராஞ்ச் பாராட்டினார். அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக, சட்டமியற்றும் செயற்பாட்டில் பொதுமக்கள் ஆலோசனையின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கை விளக்கியத்துடன், பல்வேறு அபிவிருத்தி மற்றும் நிர்வாக முயற்சிகளில் நாட்டிற்கு ஆதரவளிக்க ஐ.நாவின் தயார்நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தை நிறுவியதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்த பிராஞ்ச், சட்டமியற்றும் கட்டமைப்பில் பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துவதில் முற்போக்கான பங்கின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற குழுக்களை அமைப்பது தொடர்பில் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இதன்போது விளக்கமளித்தார். குழுக்களின் செயல்திறனை மேம்படுத்த அவற்றின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தாமல் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிறந்த பாராளுமன்ற மரபுகளை காத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான பணிகள் மற்றும் அரசியலில் பெண்களின் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் என்பன தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.