காவல்துறை உளவாளி எனக் கருதப்பட்ட பெண் நக்ஸல் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்துக் கொலை

சத்தீஸ்கரில் காவல்துறை உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நக்ஸலைட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் 40 வயது பெண்மணி நக்ஸலைட்களால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

பிஜப்பூர் மாவட்டத்தில் லேடெட் கிராமத்தைச் சேர்ந்த யாலம் சுக்ரா என்ற பெண்மணியை காவல்துறை உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் அருகேயிருகும் மலைப்பகுத்திக்கு சனிக்கிழமை கடத்திச் சென்ற நக்ஸலைட்கள், அங்கு அவரை துருவித்துருவி விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு உடலை வனப்பகுத்திகுள் இட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிஜப்பூர் மாவட்டம் உள்பட 7 மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய பஸ்டர் வட்டத்தில், நிகழாண்டில் மட்டும் நக்ஸலைட்களால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60-ஐ கடந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி, பிஜப்பூர் மாவட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், இதே மாவட்டத்தில் அங்கன்வாடி உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பெண்மணியை கடந்த 6-ஆம் தேதி நக்ஸலைட்கள் கொன்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்த மறுநாளே மீண்டும் ஒரு பெண்மணி கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.