Jetstar விமானத்தை விபத்துக்குள்ளாக்கப் போவதாக மிரட்டியவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.

சாங்கி விமான நிலையத்தில் மிரட்டும் பொருள்கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக 36 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Jetstar விமானத்தை விபத்துக்குள்ளாக்கப் போவதாக மோன்கிரிவ் மர்லி கர்ட்டிஸ் ஃபிலிப் (Moncrieff Marli Curtis Philip) என்ற அந்த ஆஸ்திரேலிய பயணி மிரட்டல் விடுத்தார்.
தம்மீது கொண்டுவரப்பட்ட 2 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவிருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கு இம்மாதம் (டிசம்பர் 2024) 18ஆம் தேதி மீண்டும் நடைபெறும்.
“விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் “விமானம் விபத்துக்குள்ளாக வேண்டும்” என்றும் அவர் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை மணி சுமார் 5.40க்குச் சாங்கி விமான நிலையத்தின் 4ஆம் முனையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அது பெர்த்துக்குச் செல்லும் (Perth) JQ96 என்ற Jetstar விமானத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்மை வேறொரு விமானத்துக்கு மாற்றினாலும் தாம் அதனையே செய்யப்போவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார்.
1,000 வெள்ளி பிணையில் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட மோன்கிரிவ் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இன்று நீதிமன்றத்துக்குச் சென்றார்.
அவரின் பயணக் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மாற்றுப் பயண ஆவணம் வழங்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய தூதரகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.