விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஐந்தாண்டுத் தடை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த மே 14ஆம் தேதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது.
இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு இருந்தது.
அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டது.
“இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ அதற்கான பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபடுவதையோ அந்த இயக்கம் கைவிடவில்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து விட்டது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரசு அளித்த தகவலின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது.
எனவே, அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் அது அறிவித்து உள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த இயக்கம் தொடா்ந்து ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.