டெல்லிக்குச் செல்வோம்’ பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்.
டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கிய ‘டெல்லிக்குச் செல்வோம்’ எனும் விவசாயிகளின் பேரணியைக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி கலைத்ததால் பேரணி பாதியில் கைவிடப்பட்டது.
இரண்டு நாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பேரணியை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) மீண்டும் தொடங்கினர். 101 பேர் அடங்கிய விவசாயிகள் குழுவினர் ஷம்பு எல்லையில் இருந்து பேரணியாகச் சென்றனர்.
அவர்கள் தொடங்கிய இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலேயே ஹரியானா காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகளைக் கலைக்க காவல்துறையினர் மீண்டும் கண்ணீர்ப்புகை குண்டை பயன்படுத்தினர்.
விவசாயிகள் தங்களின் போராட்டத்தைத் தொடர்வதற்கான அனுமதியைக் காட்டுமாறு ஹரியானா காவல்துறையினர் கேட்டனர். விவசாயிகள் தங்களின் பேரணிப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் எல்லையைக் கடப்பதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் எல்லைப் பகுதியில் 5 பேருக்கும் அதிகமானோர் கூடுவதைத் தடுக்கும் வகையில், பிரிவு 163 (முன்பு பிரிவு 144) தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்குச் செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.