தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும். ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 40வருடங்களாகியுள்ளபோதிலும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குருந்தூர் மலை வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க்குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் நாடளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.