தில்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: மாடியிலிருந்து குதித்த வாடிக்கையாளர்கள்!
மேற்கு தில்லியின் ரஜௌரி கார்டென் பகுதியில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை மிகப் பயங்கர தீவிபத்து நேரிட்டது. உணவகத்தில் இருந்தவர்கள் மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில், பயிற்சி மையம் இயங்கி வந்ததாகவும், அதிலிருந்து மாணவர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மிகவும் அபாயகரமான வகையில் அருகில் இருந்த கட்டடங்களில் குதித்து உயிர் தப்பிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுபோல உணவகத்தில் இருந்தவர்களும் மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பினர்.
பிற்பகலில், தீயணைப்புத் துறையினருக்கு, இது குறித்து தகவல் வந்ததாகவும், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து நேரிட்டபோது, உணவகத்துக்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருகக்லாம் என்றும், அவர்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கட்டடங்களில் குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.