43,000 வீரர்களை இழந்துள்ளோம் !உக்ரேன் ஜனாதிபதி-ஸெலன்ஸ்கி

ரஷ்யாவுக்கு எதிரான போரில் 43,000 போர் வீரர்களை இழந்துவிட்டதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த எண்ணிக்கை மதிப்பிட்டதைவிட மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.

டிசம்பர் 8ஆம் தேதி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவலில் 43,000 வீரர்களை இழந்துவிட்டதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப் உக்ரேன் 400,000 வீரர்களை இழந்துவிட்டதாகக் கூறிய சில மணி நேரத்தில் ஸெலன்ஸ்கியின் கருத்து வெளியாகியுள்ளது.

டிரம்ப் காயம் அடைந்த வீரர்களை குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய 370,000 சம்பவங்களில் காயமடைந்தோருக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது என்று முன்னதாக ஸெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இவர்களில் லேசான, மறுபடியும் காயம் அடைந்தவர்களும் அடங்குவர்.

போரில் காயமடைந்தவர்களில் பாதிப் பேர் மீண்டும் சேவைக்குத் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 8ஆம் தேதி காலை பாரிசில் ஸெலன்ஸ்கி, பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷ்யா, உக்ரேன் ஆகிய இரு தரப்பிலும் காயமடைந்தவர்களை டோனல்ட் டிரம்ப் மதிப்பிட்டிருந்தார்.

“600,000க்கும் மேற்பபட்ட ரஷ்ய வீரர்கள் காயம் அடைந்தனர் அல்லது உயிரிழந்தனர்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் அவர் எப்படி இந்த எண்ணிக்கையைப் பெற்றார் என்பது குறித்து விவரமில்லை. ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு பொதுவாக உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடனடி போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

போரை நிறுத்த ஸெலன்ஸ்கி உடன்பாடு ஒன்றை செய்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனை உக்ரேனும் மறுக்கவில்லை. இருந்தாலும் நீண்டகால அமைதிக்கு அமெரிக்க தலைமையிலான நட்பு நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உக்ரேன் கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.