முல்லை வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
சர்வதேச மனிதஉரிமைகள் தினமான டிசெம்பர்.10இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட வீதியில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வார்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கொலைகாரனால் நீதி வழங்கமுடியுமா?, பிள்ளைகளைத் தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம், ஓ.என்.பி ஒரு கண்துடைப்பு நாடகம், கொடுப்பனவுகளைக் கொடுப்போம் என்றுசெல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, உங்கள் இராணுவத்தைநம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படிக் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்புச்சான்றிதழ் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, என கோசங்களை எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியவாறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.