மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை.
எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கும் உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் இடையில் முன்பதிவுகளை வழங்குவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும், அவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஏறக்குறைய 50 பில்லியன் ரூபா பெறுமதியான விலைமனு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட 350 வகையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னதாக மருந்து உற்பத்திக்கான முன்பதிவுகளை வழங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது அதற்கேற்ப உந்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை ஆரம்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்