வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்ய தடை – உச்ச நீதிமன்றம்
மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்ய தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக நீதிமன்றங்கள் புதிதாக எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.
ராமர் கோவில் கட்டக்கோரி பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, வழிபாட்டு தலங்கள் சிறப்புப் பிரிவுகள் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி 1947 ஆக., 15ல் நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த எந்த ஒரு வழிபாட்டு தலத்திலும் மாற்றங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் அதன் மீது மற்றொரு சமூகத்தினர் மீது உரிமை கோரவும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பாபர் மசூதி – ராமர் கோவில் விவகாரத்துக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, உ.பி.,யின் வாரணாசி ஞானவாபி வளாகம், மதுரா – கிருஷ்ணர் கோவில் – வாஹி இக்தா மசூதி விவகாரம், சம்பலில் ஷாஹி ஜமா மசூதி ஆகியவை தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டன. முகலாயர்கள் ஆட்சியின்போது மற்றும் படையெடுப்பின் போது அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு இந்த மசூதிகள் கட்டப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இவை குறித்து நீதிமன்றங்களும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளன. கடந்த 1991 சட்டத்தின்படி இந்த வழக்குகள் செல்லாது என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.இதற்கிடையே 1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தனி அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, நீதிபதிகள்,” மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்றங்கள், ஐகோர்ட்கள் ஆகியன மசூதியில் ஆய்வு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக புதிதாக எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது’ என உத்தரவிட்டு உள்ளனர். மேலும் இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.