3 இந்திய மாணவர்கள் கனடாவில் ஒரே வாரத்தில் கொலை

கனடாவில் ஒரே வாரத்தில் மூன்று இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்திய அரசு, கனடாவிடம் தமது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

கனடாவில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ் சாட்டினார்.

இதனை இந்திய அரசு மறுத்தது. இருப்பினும் இவ்விவகாரத்தால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடாவில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் கனடாவில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த ஒரு வாரத்தில் கனடாவில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவங்கள் குறித்த முழு விசாரணைக்காக அங்குள்ள அதிகாரிகளுடன் நமது துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

“இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கனடா அதிகாரிகளிடம் இந்திய துாதரக அதிகாரிகள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இம்மாதம் 6ஆம் தேதி விடியற்காலை இந்திய மாணவர் ஹர்ஷன்தீப் சிங் அன்ட்டால் கொல்லப்பட்டார். இதன் தொடர்பில் கனடா காவல்துறை இருவரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.