ஆப்பிரிக்காவின் மயோட்டி தீவை தாக்கிய புயல் .
ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவுக்கு அருகே, இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ளது மயோட்டி தீவு. பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த தீவில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இந்த தீவை, நேற்று ‘சிடோ’ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. இதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 11 பேர் பலியாகியுள்ளனர். புயல் பாதிப்பு குறித்து பிரான்ஸ் வானிலை ஆய்வு மையமான மெட்டியோ அதிகாரிகள் கூறியதாவது:
மயோட்டி தீவில் 200.கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் தாக்கியது. கடந்த 90 ஆண்டுகளில், இந்த புயல்தான் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்.
உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. வீடுகள் ,அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி பலத்த சேதம் அடைந்துள்ளன.
பிரதமர் பிராங்கோயிஸ் பெய்ரூ கூறுகையில், ”எதிர்பாராத நிலையில், சிடோ புயல் தாக்கிவிட்டது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மயோட்டியை தாக்கிய புயல், இன்று மொஸாம்பிக் வடபகுதியான கேபோ டெல்கடோ அல்லது நம்புலா பகுதிகளை தாக்கும்,” என்றார்.