சிரிய ஆட்சி மாற்றம் – ஈரான் மீதான போருக்கான முஸ்தீபு? சுவிசிலிருந்து சண் தவராஜா.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்கள். தமது தளங்களில் இருந்து புறப்பட்ட 12 நாட்களில் ஆட்சி அவர்கள் வசமானது எதிர்பாராத ஒரு திடீர் திருப்பமாகக் கருதப்படுகின்றது. சற்றொப்ப ஒன்றரை இலட்சம் அரச படையினருக்கு எதிராக 30,000 வரையான கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமான கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் அரச படையினர் எதிர்த் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த போதிலும் ஒரு கட்டத்தில் அவர்கள் எதிர்த் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர். அதேவேளை, டிசம்பர் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியாகப் பொறுப்பில் இருந்த பஷார் ஆசாத் தனது குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு வெளியேறி ரஸ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். தலைநகர் டமஸ்கஸில் தங்கியிருந்த மேனாள் பிரதமர் மொகமட் அல்-ஜலாலி புதிய அரசாங்கத்திடம் ஆட்சியதிகாரத்தைக் கையளித்துள்ளார்.

தாஹிர் அல்-ஷாம் ஆயுதக் குழுவின் தலைவர் மொகமட் அல்-யொலானி, மேனாள் பிரதமர் அல்-ஜலாலியுடனும், அசாத் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இடைக்காலப் பிரதமராக மொகமட் அல்-பஷிர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் மாதம் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படும் வரை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபு வசந்தம் என்ற பெயரில் அறியப்பட்ட மக்கள் எழுச்சி சிரியாவில் 2011இல் ஆரம்பமான வேளை அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட நிலையில் அது ஆயுதப் போராக வெடித்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் கை ஓங்கி தீவிரவாதிகள் குறுகிய நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத வகையில் அவர்கள் விஸ்வரூபம் கொண்டு தற்போதைய தாக்குதல்களை நிகழ்த்தி ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

2017ஆம் ஆண்டு முதல் சிரியாவில் தீவிரவாதிகளில் பிடியில் இருந்த இட்லிப் பிராந்தியத்தில் சிரிய இரட்சிப்பு அரசாங்கம் என்ற பெயரில் போட்டி அரசாங்கக் கட்டமைப்பு ஒன்று தாஹிர் அல்-ஷாம் குழுவினரால் நிறுவப்பட்டது. தொழில்முறைப் பொறியிலாளரான மொகமட் அல்-பஷிர் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்தக் கட்டமைப்பின் தலைவராக அல்-யொலானியால் நியமிக்கப்பட்டிருந்தார்.

சிரியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்கிறார்கள் நோக்கர்கள். ஊழல் நிறைந்த அரசாங்கக் கட்டமைப்பு, போரிடுவதற்குத் தயாராக இல்லாத படைக் கட்டமைப்பு, தீவிரவாதச் சக்திகளுக்கு அமெரிக்கா, துருக்கி, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைத்த பெருமளவு ஆதரவு, மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சி, தனது மனைவிக்கு ஏற்பட்ட புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் விரக்தி நிலையை அடைந்திருந்த மேனாள் ஜனாதிபதி ஆசாத் பதவியைத் துறப்பதற்குத் தருணம் பார்த்திருந்தார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஸ்ய வெளியுறவுத் துறை இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில் மக்கள் மத்தியில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. அதேவேளை ஒரு சாரார் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. பழிவாங்கல்கள் எதுவும் நிகழாது எனப் புதிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்தகால நடவடிக்கைகளுக்கான பழிவாங்கல்கள் நிச்சயம் இருக்கும் என முன்னாள் படைத் தரப்பினர் கருதுவதாகத் தெரிகின்றது. அடுத்து என்ன நடைபெறும் என்பதைப் போகப் போகத் தெரிந்து கொள்ளலாம்.

மறுபுறம், ஒன்றுக்கு மேற்பட்ட தீவிவாதக் குழுக்கள் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் தமக்கிடையிலான பகைமைகளை மறந்து தமக்கிடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு நிலையான ஆட்சி ஒன்றை அவர்களால் வழங்க முடியுமா என்ற பாரிய கேள்வி உள்ளது. கடந்த காலங்களில் தமக்கடையேயான முரண்பாடுகளை வன்முறை வழியூடாகவே இந்தக் குழுக்கள் தீர்த்துக் கொண்ட நிலையில் இந்தக் கேள்வி தவிர்க்க முடியாதது. சிரியா மற்றொரு லிபியாவாக மாறிவிடுமோ என்ற அச்சம் பல தரப்புகளிலும் உள்ளதை மறைத்து விடுவதற்கில்லை.

ஏற்கனவே துருக்கி ஆதரவுத் தீவிரவாதக் குழுவான சிரிய தேசிய இராணுவத்துக்கும், துருக்கி எதிர்ப்பு அமெரிக்க ஆதரவுக் குழுவான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. குர்தி~; இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரிய ஜனநாயகப் படைகள் சிரிய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த துருக்கி எல்லையோரமான வடக்கு நகரான மன்பிஜ் மீது தாக்குதல்களைத் தொடுத்திருந்தன. எனினும் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தலையீடு காரணமாக இந்தத் தாக்குதல்கள் கைவிடப்பட்டுள்ளன.

ஒன்றுக்கு ஒன்று முரணான சித்தாந்தங்களையும், நலன்களையும் கொண்ட குழுக்கள் சிரியாவில் உள்ள நிலையில் அவர்களால் ஒற்றுமையுடன் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. குழுக்களுக்கு இடையிலான முரண்கள் மீண்டும் கடும்போக்கு ஐ.எஸ். தீவிரவாதத்தை ஊக்குவித்து விடுமோ என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. சிரியாவில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக் கணக்கான கைதிகள் ஆயுதக் குழுக்களால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் 50,000 வரையான ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாமல் உள்ளது.

சிரியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இதுவரை ஆட்சியதிகாரத்தைச் சுகித்துக் கொண்டிருந்த ஆளும் குழாம் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது என்பது யதார்த்தமான உண்மை. அதேவேளை, பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டப் போராடி வரும் ஈரானுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் மேலாதிக்கத்துக்கும், மேற்குலகிற்கும் எதிரான சக்தி எனத் தன்னை நிலைநிறுத்த முயற்சித்துவரும் ஈரான் தனது நண்பர்கள், சகாக்கள் பலரை ஏக காலத்தில் இழந்துள்ளது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக இஸ்ரேல் ஒரு வருடத்துக்கும் அதிகமாக மேற்கொண்டுவரும் தாக்குதல்களால் ஹமாஸ் இயக்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் கணிசமான போராளிகளை மாத்திரமன்றி பல தலைவர்களையும் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.

அதேபோன்று ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்புல்லா இயக்கமும் நலிவடைந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. இஸ்ரேலுக்கு எதிரான வல்லமை மிக்க சக்தி என நம்பப்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறுகிய காலத்திலேயே அதன் தாக்குதல் திறனைக் கேள்விக்கு இலக்காக்கி உள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்துக்குத் தேவையான நவீன போர் ஆயுதங்களை வழங்கிவந்த ஈரான் அதனை சிரிய நாட்டின் ஊடாகவே ஒருங்கிணைத்தது. தற்போது அந்தப் பாதை தடைப்பட்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மேற்குலகுக்கு குறிப்பாக இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய சக்திகள் ஒவ்வொன்றாக களத்தில் இருந்து அகற்றப்பட்டு வருவதை அல்லது நலிவடையச் செய்யப்பட்டு வருவதைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. இதில் முக்கிய தடைக்கல்லாக விளங்கிவந்த சிரியாவில் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தாகி விட்டது. போதாதற்கு சிரியாவில் இருந்த கடற்படைத் தளங்கள், இராணுவ ஆயுத தளபாடக் கிடங்குகள் என்பவற்றையும் தாக்கி அழித்தாகி விட்டது. இந்நிலையில், சில வேளைகளில் இஸ்ரேலுக்கு எதிரான போக்குடன் தீவிரவாதிகள் ஆட்சியை அமைத்தாலும் கிட்டிய எதிர்காலத்தில் தனக்குப் பிரச்சனை ஏதும் எழாதவாறு இஸ்ரேல் உறுதி செய்து கொண்டுள்ளது.

தற்போதைய கேள்வி பிராந்தியத்தில் தனக்கு எதிராக உள்ள ஒரேயோரு சக்தியான ஈரான் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதல் நடத்துமா என்பதே.
பல வருட திட்டமிடலின் பின்னர் சரியான தருணத்தைப் பார்த்துக் காத்திருந்த இஸ்ரேலுக்குக் கிடைத்த வாய்ப்பு 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் நடத்திய தாக்குதல். கடந்த ஒரு வருடத்தில் நடந்துள்ள சம்பவங்களை இணைத்துப் பார்க்கும் போது அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. இந்தத் திட்டத்தின் ஒரு படியாக ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தி அதன் பலத்தைக் குறைப்பது அல்லது அந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது இஸ்ரேலின் அடுத்த திட்டமாக இருந்தால் அதைத் தீர்மானிக்கப் போவது புதிய அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் அவர்களே.

– சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave A Reply

Your email address will not be published.