யாசகம் வழங்குவோர் மீது வழக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர்

பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் பகுதிகளில் வறுமை காரணமாக சிலர் யாசகம் பெறுவதை காண முடியும்.

பொது மக்களும் தங்களால் முடிந்த யாசகத்தை அவர்களுக்கு வழங்குவார்கள். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரில் யாசகம் வழங்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என இந்தோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், “ஏற்கனவே இங்கு பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறோம். யாசகம் வழங்குவதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், யாசகம் பெறுவதில் ஈடுபட்டுள்ள பலருக்கும் அரசு சார்பில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ, இந்தூர், மும்பை, ஹைதராபாத், நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்கள் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.