கடைசி விக்கெட்டுக்கு ஆகாஷ் தீப், பும்ரா துணிச்சலாக பேட் செய்ய, இந்திய அணி ‘பாலோ-ஆன்’ தவிர்த்தது.
பிரிஸ்பேன் டெஸ்டில் பொறுப்பாக ஆடிய ராகுல், ஜடேஜா அரைசதம் கடந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஆகாஷ் தீப், பும்ரா துணிச்சலாக பேட் செய்ய, இந்திய அணி ‘பாலோ-ஆன்’ தவிர்த்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்து, 394 ரன் பின் தங்கியிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே ஏமாற்றம். கம்மின்ஸ் வீசிய முதல் பந்தில் ராகுல் கொடுத்த சுலப ‘கேட்ச்சை’ ஸ்லிப் பகுதியில் ஸ்மித் கோட்டைவிட்டார். அப்போது 33 ரன் எடுத்திருந்த இவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கேப்டன் ரோகித் சர்மா (10) நிலைக்கவில்லை.
பின் ராகுல், ரவிந்திர ஜடேஜா சேர்ந்து அசத்தினர். மழை அடிக்கடி குறுக்கிட்ட போதும், இவர்களது கவனம் சிதறவில்லை. 6வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். 33 ரன்னில் கண்டம் தப்பிய ராகுல், கூடுதலாக 51 ரன் எடுத்தார். டெஸ்டில் 17வது அரைசதம் கடந்த ராகுல், 84 ரன்னுக்கு (8 பவுண்டரி) லியான் ‘சுழலில்’ அதே ஸ்மித்திடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜடேஜா, நிதிஷ் குமார் 7வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். நிதிஷ், 16 ரன் எடுத்தார். டெஸ்டில் 22வது அரைசதம் எட்டிய ஜடேஜா, 77 ரன்னில் (7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாக, இந்தியா 9 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்து தவித்தது. அப்போது ‘பாலோ-ஆன்’ தவிர்க்க இன்னும் 33 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது. இந்த சமயத்தில் ‘டெயிலெண்டர்கள்’ கைகொடுத்தனர்.
கடைசி விக்கெட்டுக்கு துணிச்சலாக ஆடிய பும்ரா, ஆகாஷ் தீப், 39 ரன் சேர்த்தனர். கம்மின்ஸ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ஆகாஷ், ‘பாலோ-ஆன்’ தவிர்க்க உதவினார். இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்து, 193 ரன் பின்தங்கியிருந்தது. ஆகாஷ் (27), பும்ரா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியாவின் பும்ரா, ஆகாஷ் தீப் நேற்று 10 வது விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்தனர். பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என பெருமை பெற்றனர். முன்னதாக 33 ஆண்டுக்கு முன், 1991ல் மனோஜ் பிரபாகர், ஸ்ரீநாத் ஜோடி இங்கு, 33 ரன் சேர்த்ததே அதிகம்.