நாடாளுமன்றத்தில் ரகளை செய்த வைத்தியர் அர்ச்சுனா !கிண்ணியா மேடையை நினைவுபடுத்தி அமைதியாக்கிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க!
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா , இன்றைய நாடாளுமன்றத்தில் யாழ் பிரச்சனைகளை கொண்டு வரும் போது , தலைப்புக்கு மேலதிகமாக செயற்பட்டு சங்கடமான ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும், வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதும்கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு , முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை கடுமையாக தாக்கி பேசமுற்பட்ட போது அவர் தொடர்ந்து பேச மறுக்கப்பட்டார்.
அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் வேலைசெய்யும் தொண்டர்கள் பல இன்னல்களை சந்திப்பதாகவும், பலமுறைப்பாடுகளை தன்னிடம் வழங்கி தீர்வு பெற்றுத் தருமாறு கோரியதாகவும் , இவை தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
இடையில் குறுக்கிட்ட சபாநாயகர், வைத்தியர் அர்ச்சுனாவைப் பார்த்து சபையில் உரையாற்றுவதாக சமர்ப்பித்த யோசனைகள் குறித்து மாத்திரம் உரையாற்றுமாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்மீது 19 வழக்குகள் உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்தான் அச்சுறுத்தப்பட்டதாகவும், தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் அரசுநடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அத்தோடு “எனக்கு சபையில் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றால் நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கின்றேன்” எனவும், சபைக்கு பொருத்தமற்ற விடயங்களையும், முன்வைத்ததால் சபையில் தழும்பல் நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை கடுமையாக தாக்கி பேச நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முற்பட்ட போது , சபை முதல்வர் பிமல்ரத்நாயக்க “நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்களே நீங்கள் கிண்ணியாவிலே ஒரு அரசியல் மேடையில் இருந்தீர்களே.. அது யாருடையஅரசியல் மேடை ? ” என நகைச்சுவையான தொனியில் கேட்ட போது சபையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களது சிரிப்பலை எழுந்ததும், தனது வாக்குவாதத்தை தவிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது ஆசனத்தில் அமைதியாக அமர்ந்தார்.