மழை அடிக்கடி குறுக்கிட, இந்திய அணி தப்பியது. போட்டி ‘சமநிலை ‘ ஆனது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர் -கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்து, ‘பாலோ-ஆன்’ தவிர்த்தது. 193 ரன் பின்தங்கியிருந்தது.
ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 24 பந்துகள் மட்டும் தாக்குப்பிடித்தது. கடைசி விக்கெட்டுக்கு பும்ரா-ஆகாஷ் தீப் 47 ரன் சேர்த்து அசத்தினர். ஆகாஷ் தீப், 31 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா (10) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா 185 ரன் முன்னிலை பெற்றது. அப்போது மழை பெய்தது.
பும்ரா மிரட்டல்: மழை நின்றதும் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன் சேர்க்க முயற்சித்தது. மறுபக்கம் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ‘வேகத்தில்’ மிரட்ட, விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. கவாஜா (8), மெக்ஸ்வீனி (4), லபுசேன் (1) நிலைக்கவில்லை. டிராவிஸ் ஹெட், 17 ரன் எடுத்தார். சிராஜ் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் (4) வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் (22), அலெக்ஸ் கேரி (20*) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை 7 விக்கெட்டுக்கு 89 ரன் என்ற நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணிக்கு 54 ஓவரில் 275 ரன் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (4*), ராகுல்(4*) நல்ல துவக்கம் தந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்த போது, மீண்டும் மழை பெய்தது. மழை தொடர்ந்த நிலையில், போதிய வெளிச்சமும் காணப்படவில்லை. இதனால் போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. தொடர் 1-1 என சமநிலையில் நீடிக்கிறது. நான்காவது டெஸ்ட் வரும் டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.