வேலூர் மாவட்டம் குடியாத்தம், துருவம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம், துருவம் கிராமத்தில் புதன்கிழமை தனது வீட்டின் அருகே சிறுத்தை தாக்கியதில் 22 வயது பெண் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம். இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள் அஞ்சலி (22) பி.காம் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களது வீடு துருவம் கொள்ளைமேடு பகுதி வன எல்லையையொட்டிய காப்புகாட்டு பகுதியில் உள்ளது.

இந்தநிலையில், புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் இருந்த பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டருகே உள்ள காப்பு காட்டுக்கு தனியாக சென்றுள்ளார். மாலை 3 மணி ஆகியும் மகள் வீடு திரும்பாததால், சிவலிங்கம் மகளைத் தேடிக் காப்பு காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வனத்துறை மற்றும் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

பின்னர், வனப்பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மாவட்ட வன அலுவலா்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பின்னர் ஆட்சியர் வி.ஆா்.சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி உயிரிழந்துள்ளார். சிறுத்தையை பிடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ ஏற்பாடு செய்து தரப்படும்” என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.