சீனா வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காகவும், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு கடன்களை வழங்கியமைக்காகவும் சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவது போன்று நாட்டின் அனர்த்தங்களில் உதவிகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் உப தலைவர் திருமதி கிங் போயோங்கைச் சந்தித்த போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற நம்புவதாக திருமதி கிங் பாயோங் இங்கு தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சீனாவுக்குச் சொந்தமான பகுதியை பூர்த்தி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பு துறைமுக நகரத்தில் அமுல்படுத்தப்படும் விநியோக நிலையம் மற்றும் கூட்டுத்தாபன திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதுடன், அதுதொடர்பான திட்டங்களையும் தொடங்க நம்பிக்கை உள்ளதாக சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் திருமதி கிங் போயோங் கலந்துரையாடலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.