ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் மற்றுமொரு பட்டியல் விரைவில் ….
ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் மற்றுமொரு பட்டியல் விரைவில் வெளியிடப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ள நிதி தொடர்பான பட்டியலை மாத்திரமே நாடிளுமன்றத்தில் வெளியிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அதற்கு முன்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்திலும் இவ்வாறு அந்த நிதியத்திலிருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. நான் வெளியிட்ட பட்டியலுக்கு மேலதிகமாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அவற்றின் தவிசாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இவ்வாறு ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுள்ளனர்.
உண்மையில் இது ஒரு தார்மீக பிரச்சினையாகும். சிலருக்கு, 110,000,000 ரூபா நிதி தவணை முறையில் அன்றி ஒரே தடவையில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு 05 இலட்சம் ரூபா அவ்வாறு நிதியத்திலிருந்து வழங்கப்பட்டாலும் அது தவணை முறையிலேயே வழங்கப்படும். எனினும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பாரயளவில் பங்கிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பட்டியலை எதிர்காலத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளில் ஜனாதிபதி நிதியம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராயப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், 1978 ஆம் ஆண்டின் ஜனாதிபதி நிதியச் சட்டம், 05 குறிப்பிட்ட முறைமையின் கீழ் பணம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.அறிவு வளர்ச்சிக்கு உதவுதல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு சில உதவிகளை வழங்குதல், வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் இறுதியாக சபையால் முடிவெடுப்பவர்களுக்கு வழங்கலாம்.