ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் வெடித்துச் சிதறியதில் 8 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 35-க்கும் அதிகமானேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் அதிகமான வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. டேங்கரில் ரசாயனம் இருந்ததால் அதன் மீது லாரி மோதிய வேகத்தில் தீ பிடித்தது. டேங்கர், லாரியில் பிடித்த தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்-க்கும் மளமளவெனப் பரவி பெரும் தீ விபத்தாக மாறியது.
இதில் 5 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் தீ பற்றி எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 20 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்கையில் பெட்ரோல் பங்கில் இருந்து பெரிய அளவிலான தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காண முடிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.