இசை மேதை ஜாகிர் உசேனின் உடல், பல்வேறு இசைக் கலைஞர்களின் இசை முழக்கங்களுடன் நல்லடக்கம்.
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேனின் உடல், பல்வேறு இசைக் கலைஞர்களின் இசை முழக்கங்களுடன் அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன், 73, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். நுரையீரல் தொற்று காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு, பல்வேறு நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த 16ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் ஜாகிர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ன்வுட் மையவாடியில், அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு, நேற்று முன்தினம் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின், முன்னணி டிரம்ஸ் கலைஞர் சிவமணி உட்பட பல இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, வாத்தியங்களை இசைத்து, ஜாகிர் உடலுக்கு அருகே இசை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து டிரம்ஸ் சிவமணி கூறுகையில், ”ரிதம் தான் கடவுள். நீங்கள் இசைக் கடவுள். நாங்கள் வாசிக்கும் இசையில் நீங்கள் எப்போதும் உடன் இருக்கிறீர்கள் என நம்புகிறோம். எங்களின் ஒவ்வொரு தாளத்திலும் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களை என்றென்றும் நாங்கள் நேசிக்கிறோம்,” என்றார்.