கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் – முருகனுக்கே சொந்தம் என திருப்பி கொடுக்க மறுத்த நிர்வாகம்

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது.

சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர், சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதற்கு, கோயில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று, கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதனால், செல்போனை பெறுவதற்கு தினேஷ் வந்துள்ளார். ஆனால் அவர்கள், கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று கூறி ஐபோனை தர மறுத்துவிட்டனர்.

செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

பின்னர், ஏழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டு செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு தினேஷ் வந்துள்ளார். இதையடுத்து, கோயிலின் பாதுகாப்பு அறையில் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.