தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை!
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு வணிகம் நடப்பதாகவும், பதிவு செய்யப்படாத சிறு கதைகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ரூ.7500 கோடி அளவுக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிரியாணி வணிகத்தில் 50 சதவீதம் அளவுக்கு நம்ம சென்னையிலிருந்து மட்டுமே வணிகமாகிறதாம்.
சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் இப்போது வகை வகையான பிரியாணிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ருசிக்கும் தரத்துக்கும் ஏற்றவாறு மக்களின் வரவேற்பு இருக்கும். முன்பெல்லாம் பகலில் மட்டும் விற்பனையாகி வந்த பிரியாணி, தற்போது இரவு பகல் என 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது. இரவில் சுடச் சுட பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பலரும் அதுபோன்ற கடைகளைத் தேடிச் சென்று சாப்பிடுகிறார்கள்.
பிரியாணி என்றால் முன்பெல்லாம் புஹாரி, அஞ்சப்பர், ஆம்பூர், பொன்னுசாமி என்றிருந்தது. பிறகு திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பன்னா, எஸ்எஸ் ஹைதராபாத், காதர் பாய் பிரியாணி என வகை வகையான கடைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டன. இந்த பெயர்களில் சில சின்ன சின்ன மாற்றங்களை செய்து சிறு சிறு கடைகளும் முளைத்தன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இரவுகளிலும் கடைகள் திறந்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிரியாணியிலேயே பல வகை உண்டு. பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பா அரிசி, சொந்த மசாலா என. அதிலும் ஊருக்கு ஊர் சிறப்பு மிக்க பிரியாணி கடைகள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றன. ஒரு ஊருக்குச் சென்றால் அங்கிருக்கும் பிரியாணி கடையைத் தேடுவதும் மக்களின் நோக்கமாக மாறியது.
இப்படிப்பட்ட பிரியாணிக்கு என்று ஒரு நாளே இருக்கிறது. அதாவது அக்டோபர் 11ஆம் தேதி உலக பிரியாணி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த பிரியாணி என்பது உண்மையில் பெர்சியாவில் தோன்றி, அண்டை நாட்டு படையெடுப்புகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்றும், முகலாயர்கள் மூலம் இந்தியாவுக்குள் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன. கோழிக்கறி, ஆட்டுக்கறி, இறால், மீன் என பல அசைவ பிரியாணிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத் தரும் என்பதாலும், பிரியாணிப் பிரியர்களுக்கு பிரியாணி என்று சொல்லிவிட்டாலே பசியெடுத்துவிடும் என்று சொல்லுமளவுக்கு இந்தியர்களை இந்த பிரியாணி கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. பிரியாணியில் பல வகை இருப்பதுபோல கேரளத்தில் செய்யும் பிரியாணி, காஷ்மீர் பிரியாணிகள் சில நேர்மாறான பிரியாணியாகக் கூட இருக்கும்.