வவுனியா வைத்தியசாலையில் இவ்வருடம் சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலையில் 54 நோயாளர்கள் உயிரிழப்பு.
வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்குட்பட்டவர்களாகும்.
வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதய நோய் வைத்தியர் ஒருவரும் உள்ள போதிலும் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலைமையால் நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு சகல சத்திரசிகிச்சைகளையும் அந்த வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது.