தென்கொரியாவில் விமான விபத்து : 29 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவின் முவான் (Muan) அனைத்துலக விமான நிலையத்தில் நேர்ந்த விமான விபத்தில் குறைந்தது 29 பேர் மரணித்ததாக அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த அந்த ஜேஜு ஏர் (Jeju Air) விமானத்தில் 175 பயணிகளும் ஊழியர்கள் அறுவரும் இருந்தனர் என்று யோன்ஹாப் குறிப்பிட்டது. உள்ளூர் நேரப்படி சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை 9.07 மணிக்கு நிகழ்ந்தது.
“விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்திருப்பதை நாங்கள் உறுதிசெய்துள்ளோம். சிலர் மோசமான காயங்களுக்கு ஆளாகியிருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்,” என்று உள்ளூர் தீயணைப்புப் பிரிவு அதிகாரியான லீ ஹியோன் ஜி தெரிவித்தார்.
தென் ஜியோலா மாநிலத்தில் உள்ள முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து நிகழ்ந்தது. பறவைகளுடன் மோதல் ஏற்பட்டதால் விமானம் தரையிறுங்குவதற்கான கருவிகளில் கோளாறு நேர்ந்தது. அதனால் விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று யோன்ஹாப் தெரிவித்தது.
விமானத்தின் பின்புறத்தின் வழியாக மீட்புப் பணியாளர்கள் பயணிகளை வெளியேற்றிக்கொண்டிருந்தனர் என்று தீயணைப்புப் பிரிவு தகவல் வெளியட்டதாக யோன்ஹாப் குறிப்பிட்டது.
சம்பவம் பதிவான படம் ஒன்றில் விமானத்தின் பின் இறக்கையிலிருந்து புகை எழுந்தது காணப்பட்டது. விமான ஓடுபாதையின் ஓரத்தில் இருந்ததுபோல் தெரிந்த விமானத்துக்கு அருகே தீயணைப்பாளர்களுடன் அவசர உதவி வாகனங்களும் காணப்பட்டன.
மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது இருவர் உயிருடன் காணப்பட்டதாக யோன்ஹாப் தெரிவித்தது. விபத்துக்கான சரியான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 27) தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சுங் மொக், முழுவீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் குறிப்பிட்டது.