இன விடுதலை ஒன்றே இலக்கு : தடைகளைத் தகர்த்தும் தமிழ்த் தேசியம் காப்போம்..!!!
இனவிடுதலை ஒன்றே எம் இலக்கு. அந்த இலட்சியப் பயணத்தில் நாம் சந்தித்த சவால்கள் மிக மோசமானவை. பொது எதிரிக்கு எதிரான அறப்போரில் எம்மை ஈடுபடுத்திய காலங்களைக் கடந்து, எங்களோடும், எங்களில் நாங்களாயும் இருப்பவர்களின் சதிகளைத் தாண்டி தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தும் காலக்கடமை எழுந்திருக்கிறது.
மக்களின் ஆணைக்கு விரோதமாகச் செயற்படுவோர் உடனடி வெற்றிகளைப் பெற்றதான விம்பம் ஒன்றை உருவாக்க முடியும். ஆனால் அறம் பிழைத்தோரின் ஆணவம் நிறைந்த வெற்றிகள் நீடிக்கவோ, நிலைக்கவோ மாட்டாது என்பதை காலம் உணர்த்தியே தீரும். அப்போது அரசியல் அறத்தின் மாண்பு மேலொங்கும் நிலை உருவாகியே தீரும் என்பதை உணர்ந்தவர்களாக, புதிய ஆண்டில் தீர்க்கமும், தெளிவும் நிறைந்த எமது அரசியல் பயணத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் இன்று நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்ர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்தின் பங்குத்தந்தை அதிவண.சில்வேஸ்ரர் தாஸ் அடிகளாரின் ஆராதனையுடனும், ஆசியுரையுடனும் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.