போலி பத்திரம் தயாரித்து கோடிகளுக்கு காணியொன்றை விற்பனை செய்த அனுராதபுரம் தம்பதி கைது!

நுவரெலியா, கிரிகோரி ஏரிக்கு அருகில் 17.6 பேர்ச் காணிக்கு போலி பத்திரம் தயாரித்து ஒரு கோடியே பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு கண்டியில் ஒருவருக்கு விற்பனை செய்த அனுராதபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கண்டி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அநுராதபுரத்தில் போலி பத்திரம் மற்றும் தாள்களை தயாரித்து வைத்திருந்த போலி கச்சேரியொன்றை சோதனையிட்டதுடன், போலி ஆவணங்களுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள காணியை கண்டி வர்த்தகருக்கு கொள்வனவு செய்வதற்கு தரகராக பணியாற்றிய ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் வைத்திருந்த தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் போலியானது என உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி அநுராதபுரத்தில் உள்ள மற்றுமொரு போலி கச்சேரியில் பொலிஸார் சோதனை மேற்கொண்டதில் போலி அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், பரீட்சை சான்றிதழ்கள், அரசாங்க அலுவலக கடிதத் தலையங்கள், திணைக்களத் தலைவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் சிக்கியுள்ளனர்.

இந்த இரண்டு போலி கச்சேரிகளும் ஒரே நபரால் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த இடத்தில் போலி சான்றிதழ் தயாரித்து 3000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை எடுத்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸானநாயக்க, கண்டி பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க, பொலிஸ் அத்தியட்சகர் இளங்ககோன், கண்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விசேட மோசடி விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் எச்.எம்.பி. ஹேரத், உப பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள்களான வசந்த, ஹெட்டியாராச்சி, சந்தன, ரணசிங்க, நுவான் மற்றும் பிரேமசிறி ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.