திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

திருமலையில் பக்தர்கள் இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய டோக்கன் தேவையில்லை. ஆனால், வைகுண்ட ஏகாதசி நாட்களில் டோக்கன் இல்லாத பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துஇருந்தது.

முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 1.20 லட்சம் இலவச தரிசன டோக்கன் இன்று காலை 5:00 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், ஸ்ரீநிவாச வளாகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று காலை டோக்கன் வழங்க இருந்த நிலையில், நேற்றே 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

பைராகி பட்டேடா பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களை வரிசையில் செல்ல போலீசார் அனுமதித்த போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்தனர்.

இதில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்பது தெரியவந்துள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.