சிறுத்தையிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அதன் வாலை பிடித்து நிறுத்திய துணிச்சலான இளைஞர் (Video)

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோட்டிகெஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரின் துணிச்சலான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாள்களுக்குமுன் அந்தக் கிராம மக்கள் வயல்வெளியில் சிறுத்தை ஒன்றைப் பார்த்தனர். ஏற்கெனவே அந்தச் சிறுத்தை சுற்றுவட்டாரக் கிராமங்களில் கால்நடைகளைக் கொன்றது குறித்த செய்திகளைக் கேட்டு அஞ்சிய அவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

கூண்டு, வலை போன்றவற்றுடன் 15 பேர் கொண்ட குழு சிறுத்தையைத் தேடியது.

உள்ளூர்வாசிகள் சிலரும் அக்குழுவினருடன் சேர்ந்து தேடலில் ஈடுபட்டனர். அவர்களில் யோகானந்தும் ஒருவர்.

தீவிர தேடலுக்கு இடையே திடீரென்று ஒரு புதர் மறைவிலிருந்து வெளியானது சிறுத்தை. மீட்புக்குழு இருமுறை வலையை வீசியும் நழுவிவிட்டது அந்தச் சிறுத்தை.

கூடியிருந்த பெண்கள், குழந்தைகளை நோக்கி அது நகர்ந்த வேளையில் விரைந்து செயல்பட்டார் யோகானந்த். துணிச்சலுடன் அதை நெருங்கி அதன் வாலை இறுகப் பற்றிக்கொண்டார்.

வனத்துறையினர் உடனடியாக வலையை அதன் மீது வீசிப் பிடித்தனர்.

“சிறுத்தை கூட்டத்தினரைத் தாக்கினால் சிலருக்குக் காயமேற்படும். பதிலுக்குக் கிராமத்தினர் அதைத் தடியால் அடித்தால் சிறுத்தை காயமடையும். அது மெதுவாகத்தான் நகர்ந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். கடவுள்மேல் பாரத்தைப் போட்டு, சிறுத்தையின் வாலை இறுகப் பிடித்து முழு பலத்துடன் அதைப் பின்னே இழுத்தேன். சிறுத்தை திரும்பியது. ஆனால் வனத்துறையினர் சரியான நேரத்தில் அதை வலை வீசிப் பிடித்துவிட்டனர்,” என்றார் யோகானந்த்.

பிடிபட்டது நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர். இரை கிடைக்காமல் அது சோர்வுற்றிருந்ததாகவும் சிறுத்தைக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. சிகிச்சைக்காகத் தற்போது அது மைசூரில் உள்ள மீட்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.