ஆயுதமேந்தித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 சிங்கப்பூர் வாசிகள் கைது!
சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 3 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பின்னணியை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, அறிக்கையொன்றில் வெளியிட்டது.
1. முகமது இண்ட்ரா அக்மால் பின் எஃபெண்டி (Muhammad Indra Aqmal bin Effendy)
இண்ட்ரா 2024ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கைதானார்.
2023இல் ஹமாஸின் சித்தாந்தங்களைப் பின்தொடர ஆரம்பித்த அவர் காஸாவுக்குப் பயணம் செல்வதற்கான வழிகளையும் ஆராய்ந்தார்.
தற்காப்புக் கலையைக் கற்றவரான இண்ட்ரா பொம்மைத் துப்பாக்கிகளை வைத்துச் சுடும் பயிற்சிகளை வீட்டில் மேற்கொண்டார்.
இந்தோனேசியாவுக்குச் சென்று உண்மையான துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சுடுவது எப்படி என்று பயிற்சி பெறவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
2. முகமது லத்தீஃப் பின் ரஹிம் (Mohamad Latiff bin Rahim)
நிறுவனமொன்றில் இயக்குநராகப் பணிபுரிந்த லத்தீஃப் பேங்காக்கில் வசித்துவந்தார்.
2024ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது அவர் கைதானார்.
2010இலிருந்து அவர் இணையம் வழி தீவிரவாதச் சித்தாந்தங்களைக் கற்றுவந்தார்.
2022இல் தாய்லந்தில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார்.
கத்தியால் எப்படிக் குத்துவது, வெட்டுவது போன்ற பயிற்சிகளைச் சமையலறைக் கத்திகளைக் கொண்டு சுயமாகப் பயிற்சி செய்துவந்தார் லத்தீஃப்.
ஆனால் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த அவருக்கு எண்ணம் இல்லை;
ஈரானிலிருந்து உத்தரவு வந்தால் தயங்காமல் அதனை மேற்கொள்ள அவர் தயாராக இருந்தார்.
3. நுரிஷாம் பின் யூசோஃப் (Nurisham bin Yusoff)
பாதுகாவலர் வேலை செய்துவந்த நுரிஷாம் 2024 அக்டோபர் மாதம் கைதானார்.
2023ஆம் ஆண்டு ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் – ஹமாஸ் பூசல் தொடர்பில் அவர் தீவிரவாதச் சித்தாந்தங்களைப் பின்பற்ற ஆரம்பித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் பெற்ற பயிற்சி ஹமாஸின் ஆயுதப் படையில் உதவியாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
காஸாவுக்குச் செல்வது எப்படி என்பதையும் அவர் ஆராய்ந்தார்.
அங்குச் செல்வதற்கு முன் இந்தோனேசியாவின் பாத்தாம் நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறவும் நுரிஷாம் திட்டமிட்டிருந்தார்.
அந்த 3 சம்பவங்களும் வெளிநாட்டுச் சர்ச்சைகள் எவ்வாறு சிங்கப்பூரின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு சொன்னது.
பூசல் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்டாலும் அதன் தொடர்பிலான தீவிரவாதச் சித்தாந்தங்கள் குறையவில்லை என்று அது சுட்டியது.
தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு எதிராகக் கவனத்துடன் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.