15 வயது மாணவியுடன் குடித்தனம் நடத்திய ஆசிரியர் கைது.
தன்னிடம் பாடம் படித்த 15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு, அவருடன் தலைமறைவாகி, குடித்தனம் நடத்திவந்த Tuition ஆசிரியர் ஒன்றரை மாதங்களுக்குப்பின் கைதுசெய்யப்பட்டார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த அந்த 30 வயது ஆடவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளார்.
தன்னுடைய மாணவியைக் காதலிப்பதாகவும் அவருடன் ஓடிப்போவதாகவும் கடந்த 2024 நவம்பர் 23ஆம் தேதி ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவைத்துவிட்டு, அவர் தலைமறைவானதாகக் காவல்துறை தெரிவித்தது.
மாண்டியா அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, புதுமணத் தம்பதியர்போல் அவர்கள் வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, போக்சோ எனும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைதுசெய்யப்பட்டு, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பல வாரங்களாக அந்த ஆசிரியரைக் கண்டுபிடிக்க முடியாததால் அவரைப் பற்றித் தகவல் தருவோர்க்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று ஜனவரி 3ஆம் தேதி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஆசிரியரும் மாணவியும் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர், காவல்துறையின் அறிவிப்பைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.
உடனே அவர், அவ்விருவரைப் பற்றியும் தன் நண்பரிடம் கூற, அந்நண்பர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
ஆயினும், சிறுமியை மீட்பது தமது கடமை எனக் கூறி, காவல்துறையின் வெகுமதியைப் பெற மறுத்துவிட்டார் அந்த உரிமையாளர்.
குடும்பப் பிரச்சினைகளால் தம் மனைவியைவிட்டுப் பிரிந்துவிட்டதாகத் தங்களிடம் அந்த ஆடவர் கூறியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.