மியன்மார் ராணுவத் தாக்குதலில் 40 பேர் மரணம்.

மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மியன்மார் ராணுவம் நடத்திய ஆகாயத் தாக்குதலில், குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர் ஒருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினரும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

ரக்கைன் மாநிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, சிறுபான்மை ‘அரக்கன்’ ராணுவம் மியன்மார் ராணுவத்துடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டில் ‘அரக்கன்’ ராணுவம் பல பகுதிகளைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், மியன்மார் ராணுவம் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததைத் தொடர்ந்து, மியன்மாரில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ரக்கைன் பூசல்.

‘ராம்ரீ’ தீவில் உள்ள ‘கியாக் நி மாவ்’ கிராமத்தில் புதன்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1.20 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் மணி 2.50) மியன்மார் ராணுவ விமானம் ஒன்று வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாக ‘அரக்கன்’ ராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன.

“முதற்கட்ட அறிக்கைகளின்படி அப்பாவி மக்களில் 40 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமுற்றனர்,” என்றார் பேச்சாளர்.

வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில், குழப்பநிலையில் மக்கள் எரிந்துபோன இடிபாடுகளுக்கு இடையே நடந்துசெல்வதைக் காணமுடிந்தது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனம், சம்பவம் குறித்து கருத்துக் கேட்க மியன்மார் ராணுவத்தைத் தொடர்புகொள்ள முயற்சிசெய்தது. இருப்பினும், எந்தவொரு பதிலும் வரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.