விஜய்; புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்க தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். அவர், அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முன்பு, தனது பெயரில் நடத்தி வந்த மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களே கட்சியிலும் பொறுப்பாளர் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திராவிடக் கட்சிகளைப் போன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கட்டமைப்பை மாற்றும் வகையில் மாவட்டச் செயலாளர் பதவியை விஜய் உருவாக்கினார். இதையடுத்து பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் சென்று மாவட்டச் செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
அதன்பின்னர், தமிழக வெற்றிக்கழகம் அமைப்பு ரீதியாக 100 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள், அணிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணி வாக்கெடுப்பு மூலம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், புதிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் பெயர் பட்டியலைப் பார்த்து ஆராய்ந்து விஜய் ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
தவெக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள், அணித்தலைவர்கள் பங்கேற்றனர்.
விஜய் தி.நகரில் நடைபெறும் தளபதி 69 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். விஜய் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கட்சி உட்கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனை, 105 முதல் 110 வரை மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.