பெண்ணைக் கொலை செய்து 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த ஆடவர்.

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் படிதாரின் வாடகை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் நகைகள் அணிந்து, கழுத்தில் கயிற்றுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், சேலை அணிந்த பெண்ணின் சிதைந்த உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட பெண்ணான பிங்கி பிரஜாபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர்.

உஜ்ஜயினியில் வசிக்கும் சஞ்சய் படிதார், கடந்த ஐந்து ஆண்டுகளாக பிங்கியுடன் உறவில் இருந்து வந்ததாகக் கூறியுள்ளார்.

பிங்கி திருமணம் செய்துகொள்ளும்படி சஞ்சய்யை வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் எரிச்சலடைந்த சஞ்சய் தனது நண்பரின் உதவியுடன் பிங்கியைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

“பிங்கியின் வயது 30. அவர் கடந்த 2024, ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து வீட்டின் ஒரு பகுதியைத் திறக்கும்படி வீட்டு உரிமையாளரை அக்கம்பக்கத்தினர் அழைத்தனர். அப்போது, பெண்ணின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது தெரியவந்தது,” என்று தேவாஸ் காவல்துறை கண்காணிப்பாளர் புனித் கெலாட் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வீடு இந்தூரில் வசிக்கும் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவருக்குச் சொந்தமானது.

ஜூன் 2023ல் திரு ஸ்ரீவஸ்தவா தனது வீட்டைப் படிதாருக்கு வாடகைக்கு கொடுத்ததாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு கெலாட் கூறினார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்வதை நிறுத்தியதால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று மற்றொரு காவல் அதிகாரி அமித் சோலங்கியை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.