கொலை வழக்கின் சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.
முன்னாள் கம்போடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தாய்லாந்து அதிகாரிகளிடம் கம்போடியா ஒப்படைத்தது.
தாய்லாந்திலிருந்து கம்போடியாவுக்கும் அவர் நுழைந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து நாட்டவரான 41 வயது எக்கலாக் பெனோய், திட்டமிட்டு கொலை செய்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் 74 வயது லிம் கிம்யாவை அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.
எக்கலாக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பது போல தெரிவதாக அவர்கள் கூறினர்.
எக்கலாக் மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றுவதாகவும் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமது மனைவி, சகோதரர் ஆகியோருடன் கம்போடியாவிலிருந்து பேங்காக்கிற்கு லிம் கிம்யா சென்றதாக அதிகாரிகள் கூறினர்.
அங்கு அவரைத் துப்பாக்கிக்காரர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.