ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு!

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச.30-ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.

இவற்றின் தொலைவை 225 மீட்டராக குறைக்க கடந்த புதன்கிழமை முயற்சி செய்யப்பட்டது.

அப்போது புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்துவிட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களுக்கான இடைவெளி 15 மீட்டராக முதலில் குறைக்கப்பட்டது, தற்போது 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.