உக்ரேனுக்காகச் சண்டையிட்டபோது ராணுவ வீரர் கொலை; ரஷ்யத் தூதருக்கு அழைப்பாணை விடுக்கும் ஆஸ்திரேலியா (Video)

உக்ரேனுக்காகச் சண்டையிட்டபோது ரஷ்யாவால் பிடிபட்ட மெல்பர்ன் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளிவந்த அறிக்கைகளின் தொடர்பில் ஆஸ்திரேலியா ரஷ்யத் தூதருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாக பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் கூறியுள்ளார்.

ஆஸ்கார் ஜென்கின்ஸ் என்ற அந்த ஆடவரின் நிலையை உடனடியாக உறுதிசெய்யும்படி ஆஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்ய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவர் கொல்லப்பட்டதாக வெளிவந்த அறிக்கைகள் குறித்து ஆஸ்திரேலியா மிகுந்த கவலையுடன் இருப்பதாக அல்பனிஸ் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

‘‘உண்மை வெளிவரக் காத்திருப்போம். ஆஸ்கார் ஜென்கின்சுக்கு எந்தவிதத் தீங்கும் நடந்தால், அது கண்டிப்பாகக் கண்டிக்கத்தக்கது. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்,’’ என அல்பனிஸ் தெரிவித்தார்.

மாஸ்கோவில் உள்ள அதன் தூதரை மீட்டுக்கொள்ளுமா அல்லது ரஷ்யத் தூதரை நீக்குமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அனைத்து அறிக்கைகளையும் உறுதிசெய்த பிறகே தமது அரசாங்கம் முடிவெடுக்கும் என்று அல்பனிஸ் பதிலளித்தார்.

வெவ்வேறு அரசாங்கங்களின்கீழ் ரஷ்யாவுடன் ஆஸ்திரேலியா பல்லாண்டுகளாக மிகச் சிரமமான உறவைத் தொடர்வதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.

மெல்பர்னில் ஆசிரியராக இருந்த ஜென்கின்ஸ், உக்ரேன் ராணுவத்திற்குச் சேவையளித்துக் கொண்டிருந்தபோது, போர்க்கைதியாக சென்ற ஆண்டு ரஷ்யாவால் பிடிபட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
https://youtu.be/iU1BUd1vLmo

Leave A Reply

Your email address will not be published.