ஜனவரி 19 முதல் காஸா சண்டைநிறுத்தம் : வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்
காஸாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன.
அந்தச் சண்டை நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை (19 ஜனவரி) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 மாதங்களாக நீடிக்கும் சண்டையில் பிணை பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 6 வாரங்களுக்குச் சண்டை நிறுத்தப்படும்.
அதன் பிறகு காஸா வட்டாரத்திலிருந்து இஸ்ரேலியத் துருப்புகள் கட்டங்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள்.
கைதிகளின் பரிமாற்றமும் நடைபெறும்.
பாலஸ்தீன மக்கள் வீதிகளில் ஒன்றுகூடி கொண்டாடிவருகின்றனர்.
கான் யூனிஸில் (Khan Younis) மக்கள் வீதிகளில் ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர்.
“மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆம், நான் அழுகிறேன். ஆனால் இது ஆனந்த கண்ணீர்” என்று சண்டையில் வீட்டை இழந்து தவிக்கும் 5 பிள்ளைகளின் தாய் கூறினார்.
டெல் அவிவ் (Tel Aviv) நகரில் இஸ்ரேலியப் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் சண்டை நிறுத்த அறிவிப்பைக் கொண்டாடுகின்றனர். “அன்புக்குரியவர்களின் வீடு திரும்பக் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.
சண்டை நிறுத்த உடன்பாடு குறித்து இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடவில்லை.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகமும் அரசாங்கமும் அங்கீகரித்த பின்னரே அது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸா சண்டையில் 46,000 பேர் மாண்டனர்.