இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்.
டெஸ்ட் அரங்கில் இந்திய அணி தடுமாறுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற தவறியது. இது பற்றி தேர்வுக்குழு தலைவர் அகார்கர், பயிற்சியாளர் காம்பிர் விவாதித்தனர். பேட்டிங்கில் சோபிக்காததே வீழ்ச்சிக்கு காரணம் என கண்டறிந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி போன்ற அனுபவ வீரர்கள் சொதப்பினர். ‘ஆப்-ஸ்டம்ப்பில்’ இருந்து விலகிச் செல்லும் பந்துகளை வீணாக அடித்து அவுட்டானார் கோலி. இதை துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரால் திருத்த முடியவில்லை.
இதையடுத்து புதிய பேட்டிங் பயிற்சியாளராக சவுராஷ்டிரா அணியின் முன்னாள் வீரர் சிதான்ஷு கோடக் 52, நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த இடது கை பேட்டரான இவர், 20 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்தார். இந்திய அணிக்காக விளையாடவில்லை. 130 முதல் தர போட்டிகளில் 15 சதம் உட்பட 8,061 ரன், 70 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ‘கவர் டிரைவ்’ ஷாட் அடிப்பதில் வல்லவர். 2013ல் ஓய்வு பெற்றார்.
கடந்த 2019ல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியாளரானார். இந்திய ‘ஏ’ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார். அயர்லாந்துக்கு எதிரான ‘டி-20’ தொடரில் (2024) இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்தார். அப்போது தலைமை பயிற்சியாளர் லட்சமணுக்கு பக்கபலமாக பணியாற்றினார்.
அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ‘டி-20’, ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவதாரம் எடுக்க உள்ளார் சிதான்ஷு கோடக்.
இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”அபிஷேக் நாயரின் ஆலோசனைகள் இந்திய பேட்டர்களுக்கு உதவவில்லை. இதனால் ‘ஸ்பெஷலிஸ்ட்’ பேட்டிங் பயிற்சியாளராக கோடக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வீரர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், மாற்றத்தை ஏற்படுத்துவார்,” என்றார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பிர் பதவி ஏற்ற போது, அவருக்கு விருப்பமானவர்கள் ‘துணை’ பதவியை பெற்றனர். துணை, பேட்டிங் பயிற்சியாளர் என இரட்டை பொறுப்பை அபிஷேக் நாயர் வகித்தார். மற்றொரு துணை பயிற்சியாளராக நெதர்லாந்தின் ரியான் டென் டஸ்காட்டே, பவுலிங்கிற்கு மார்னே மார்கல் நியமிக்கப்பட்டனர். டிராவிட் காலத்தில் இருந்த திலிப் மட்டும் பீல்டிங் பயிற்சியாளராக நீடித்தார். தற்போது கோடக் நியமனத்தை தொடர்ந்து ‘துணை’ பயிற்சியாளர் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது. பேட்டிங் பயிற்சி கொடுத்து வந்த அபிஷேக் நாயருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இவர் தாமாக பதவி விலகலாம். மார்கல்- காம்பிர் உறவிலும் விரிசல் காணப்படுகிறது. விரைவில் புதிய பவுலிங் பயிற்சியாளர் நியமிக்கப்படலாம்.